திங்கள், 8 ஜூன், 2009

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கசப்புச் சுவையுடையது ; உஷ்ணம் செய்யும். வறட்சியையுடையது. இது கபம், சோபை, ஆமதோஷம் ஆகியவற்றைக் கண்டிக்கிறது அல்லது தணிக்கிறது.

சருமநோய், பாண்டு, இருதயநோய், விஷம் ஆகியவற்றைப் பரிகரிப்பதில் பயன்படுகிறது.

ஐந்து அல்லது 10 கரிசாலை இலைக் கொழுந்துடன் 5 அல்லது 7 மிளகைச் சேர்த்து மோர்விட்டு அரைத்து மாத்திரை யாக்கியேனும், வெல்லம் சேர்த்து மாத்திரை செய்தேனும் காலையில் கொடுக்கலாம் ; ஒரு தேக்கரண்டி அளவு அல்லது ஒரு அவுன்ஸ் கரிசாலை இலைச்சாற்றுடன் இரண்டு அல்லது நான்கு அவுன்ஸ் பாலுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தேனும், அல்லது 4 அவுன்ஸ் மோர் கலந்து அதனுடன் சிறிது உப்புச் சேர்த்தும் காiயில் தினந்தோறும் கொடுக்கலாம் ; கரிசாலை இலையுடன் புதிய இஞ்சி, மிளகு, உப்பு, பிற ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் சட்டினி அரைத்துத் தரலாம்.

செய்கை : பித்தநீர் பெருக்கி ; குளிர்ச் சுரமகற்றி வெப்பகற்றி ; உரமாக்கி .

உபயோகங்கள் : காமாலை நோயைத் தீர்ப்பதற்குப் பச்சிலைகளில் கரிசலாங்கண்ணி மிகப் பிடித்தமான மூலிகையாகத் தென்னாட்டில் வழங்கப்படுகிறது. காமாலை நோயின் சிலவகைகளில் இது பிரசித்தமான பயனைத் தருகிறது. பாண்டு நோயுடன் தோன்றுகின்ற தாழ்ந்த சுரங்கட்குக் கரிசாலையோடு மிளகு சேர்த்துச் செய்யப்பட்ட மாத்திரை நல்ல குணத்தைத் தருகிறது ; அதாவது நற்பலனை அளிக்கிறது. நல்ல செரிமானம் இல்லாத நோய்களில், மோருடன் சேர்த்துச் செய்யப்பட்ட கரிசாலை மாத்திரையை தேர்ந்தெடுக்கவும். தலைமயிரைக் கருக்க வைக்கவும், தலை மூழ்கிய பிறகு மூளைக்கு குளிர்ச்சியாயிருக்கவும் நாடு முழுவதும் கரிசலாங்கண்ணித் தைலம் புகழுடன் பயன்பட்டு வருகிறது.

இலைச்சாறு 90 துளி அதனுடன் நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட, பாம்புக்கடி விஷம் போகும்.

இலைச்சாறு 2 துளி, 8 துளி தேனில் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளக்கு உண்டாகும் ஜலதோஷம் நீங்கும்.

தேள்கடிக்கு கரிசலாங்கண்ணி இலைகற்கத்தை கடித்த இடத்தில் நன்றாய்த் தேய்த்து அதையே அவ்விடத்தில் வைத்துக் கட்டினால் விஷம் நீங்கும்.
வேர்ச் சூரணத்தைக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும், சர்ம வியாதிகட்கும் கொடுக்கலாம்.