திங்கள், 8 ஜூன், 2009

முருங்கையின் குணங்கள்

சாம்பார் என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் காய் முருங்கை காய். தென்னிந்தியக் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் வளர்க்கப்படும் மரம் முருங்கை மரமே. இதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று இதன் எல்லாப் பகுதிகளும் சமையலுக்குப் பயன்படுகின்றன. முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையில் அக்ரோடீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்.சி அதிகளவில் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் முருங்கைக் கீரையில் தண்ணீர் சத்து 75.9 விழுக்காடும், புரோட்டீன் 6.7 விழுக்காடும், கொழுப்புச் சத்து 1.7 விழுக்காடும், தாதுக்கள் 2.3 விழுக்காடும், நார்ச்சத்து 12.5 விழுக்காடும் உள்ளன. மற்றும் கால்சியம் முருங்கைக் கீரையில் மிக அதிகளவாக 440 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 70 மில்லி கிராமும், 220 மில்லி கிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின்.பி சத்துக்களும் உள்ளன.

வளரும் குழந்தைகளுக்கு முருங்கை இலை சூப் ஒரு விலை மதிப்பில்லாத டானிக். தாமதமாக நடக்கும் குழந்தைகளுக்கும், நோயில் படுத்து நடக்க முடியாதவர்களுக்கும் இளம் முருங்கைக் கீரையை வேக வைத்து அந்தச் சூப்பைப் பாலுடன் கலந்து கொடுத்தால் எலும்புகள் உறுதியாவதுடன் இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்தமும் சுத்தமாகும்.

பாலுடன் கலந்த முருங்கைக் கீரைச் சூப்பை கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட அவர்களுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, விட்டமின்ஸ் ஆகியவை போதிய அளவு கிடைப்பதுடன் அவர்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்து குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சார்ந்த நோய்களையும் நீக்கும். தண்ணீரில் சிறிது உப்புடன் முருங்கைக் கீரையை வேகவைத்து கிடைக்கும் சூப்பில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அருந்த தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.


நெஞ்சகச் சளியின் பிரிவுகளான ஆஸ்துமா, பிராங்கைடிஸ் மற்றும் காச நோயினால் அவதிப்படுபவர்கள் முரங்கை இலையை பத்து நிமிடம் வேக வைத்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்பு, மிளகு, எலுமிச்சம் சாறு ஆகியவற்றினைக் கலந்து வாரத்திற்கு மூன்று நாள், நோய் சரியாகும் வரை சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைவினால் இல்வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்கள் (ஆண்களும் பெண்களும்) முருங்கைப் பூவைப் பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட அவர்கள் உணர்வில் விரும்பத்தக்க மாறுதல் ஏற்படும். முருங்கை மரக்கிளையின் பட்டையை வெயிலில் உலர்த்தி பின்னர் பொடி செய்து, இரண்டு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பவுடரைக் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். இத்தண்ணீர் ஒரு டம்ளராக கொதித்து வற்றியவுடன், வடிகட்டி குளிர்ந்த பின்பு அருந்த வேண்டும். இவ்வாறாக மூன்று மாதம் சாப்பிட ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விரைவில் விந்து வெளிப்படுதல் சரியாவதுடன் விந்தும் கெட்டிப்படும்.

முருங்கை இலைச் சூப்புடன் சிறிது தேன் விட்டுச் சாப்பிட வயிற்றோட்டம், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். முருங்கை இலை சூப், கேரட் ஜூஸ் இரண்டையும் கலந்து பருக சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாவதால் ஏற்படும் எரிச்சலுடன் கூடிய நீர்க்கடுப்பு சரியாகும்.