திங்கள், 8 ஜூன், 2009

முருங்கையின் மருத்துவ பயன்கள்

இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.


இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது. சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?

அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.
முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.


இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.

முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!

முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக