புதன், 28 ஜனவரி, 2015

கொய்யாப் பழம்.

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அணுக்களை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட, பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் வளர்ச்சியடையவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

திங்கள், 26 ஜனவரி, 2015

அல்சர் அவதியா..?

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.
சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.
சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:
கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

மிளகு

இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு பிபெரசீயஸ் என்னும் தாவர வகையைச் சேர்ந்தது இதை மசாலாப் பொருளாகவும் ஒரு வித மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உணவு கெட்டு விடாமல் இருப்பதற்காகவும் மிளகு பயன்படுத்துகின்றனர். மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது.
கருப்பு மிளகு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்கள் பற்றி பார்கலாம்...


வயிற்றுக்கு நல்லது:மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.

எடை இழக்க உதவுகிறது:
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.

சருமத்திற்கு நல்லது:சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து.

இருமல் மற்றும் சளிக்கு நிவாரணம்:
ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..

நல்ல ஆக்ஸிஜனேற்றம்:
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்..
ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

அமிர்தப்பொடி..!

(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)

தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.

செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்:
நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சௌ சௌ...!

ரத்த அழுத்தம்,.நரம்பு தளர்ச்சியை நீக்கி சக்தியை அளிக்கும் சௌ சௌ...!
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

100 கிராம் சௌசௌவில்
17.8% கார்போஹைட்ரேட்,
10.7% ஸ்டார்ச்,
10.5% போலேட் சத்து,
5.4% புரதசத்து,
6.7% சுண்ணாம்பு சத்து,
4.8% பாஸ்பரஸ்,
9% மாங்கனீசு கொண்டுள்ளது.


உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு..
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும்.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது..
சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.
புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..
தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.
சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.
கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.